Thursday, July 4, 2013

கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்

  • இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதமாக இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் 2 அல்லது 3 சதவிகிதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள். 
  •  முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே.
  • இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நகரங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 28.3 சதவிகிதத்தினர் மிக மோசமான வறுமையில் வாழ்கிறார்கள்.
  • நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது.
  • நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே.
  • தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.
  • தலித்துகளில் 32 சதவிகிதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிகிதத்தினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர்.
  • பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. 
  • தற்போதைய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகையான 13.4 சதவிகிதத்திற்கு சுமார் 70 - 75 முஸ்லிம் எம்.பி-க்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய முஸ்லிம் எம் பி-க்களின் எண்ணிக்கை 33 மட்டுமே!
  • மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம்.

இப்படிப் போகிறது அந்த அறிக்கை A1.

யாருடைய அறிக்கை? ஏழு வருடங்களுக்கு முன், 2005இல் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கால் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ‘சச்சார் கமிட்டி’யின் அறிக்கைA2.

யாரைப் பற்றி?

"இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது." என இல்லஸ்டிரேட்டட் வீக்லி 29-12-1975 தேதியிட்ட இதழில் எழுதினாரே குஷ்வந்த்சிங், அந்த இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி....

சுருக்கமாக சொன்னால்,
தலித்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற சிறுபான்மை மக்களைவிடவும் முஸ்லிம்கள் மிக மோசமாகத் தாழ்ந்து கிடக்கிறார்கள்.
முஸ்லிம்கள் இந்திய மக்கள் தொகையில் 14%க்கு மேல் இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த சதவீதம் வெறுமனே 2.5% மட்டுமே  என்பவைதான் அந்த அறிக்கை தரும் அதிர்ச்சி.

நிற்க. 2005இல் இந்த அறிக்கை வெளியாகியதிலிருந்து, நம் சமூகத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்ல நாம் என்ன திட்டங்கள் செய்துள்ளோம்?? இன்று நம் சமுதாயத்தில் அதிக அளவிலான குழந்தைகள் கல்வி கற்றுக்கொண்டுள்ளன. ஆயினும் ஒரு தனி மனிதனின் கல்வி பற்றிய சிந்தனைக்கும், நம் சமூகத்தின் வளர்ச்சிக்கும் இடையே எத்தனை எத்தனை பிளவுகள்??? ஏன் இந்த நிலை? அரசு தன் வாக்குறுதிகளை பொய்ப்பிக்கிறது என்று வரலாற்றின் அத்தனை பக்கத்திலும் தெரிந்து கொண்ட பின்னரும், நம் சமுதாயத்தை முன்னேற்ற நாம் ஏன் எந்த அடியையும் இன்னும் எடுக்கவில்லை? யார் இதற்கு காரணம்? ஏன் இதை நிவர்த்தி செய்ய முயலாமலே நாம் ஓடிக்கொண்டுள்ளோம்? எதனை நோக்கி? இந்த ஓட்டத்தில் நம் தமிழக முஸ்லிம் சமுதாயம் எத்தனை தாக்குப் பிடிக்க முடியும்? சிந்தித்தோமா??? இனியும் சிந்திப்போமா??? வாருங்கள் பொன்னேட்டில் பதியப்பட்ட நம் வரலாற்றையும், வளமான எதிர்காலத்திற்கான இப்போதைய திட்டங்களையும் சற்றே மறு ஆய்வு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

இஸ்லாத்தில் கல்வியின் மாண்பு:

”96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! 96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! 96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், 96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; 96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.”
இதுதான் இவ்வுலகின் இறுதித்தூதரான முஹம்மத் நபியவர்களுக்கு இறைவன் இறக்கி வைத்த முதன் முதல் வசனம். இதை விடப் பெரிய சான்று வேறென்ன இருக்கக்கூடும், இஸ்லாத்தில் கல்விக்கு தரப்படும் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குவதற்கு?

இறைமறையின் பல இடங்களில் அல்லாஹ் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றான். கற்றோரும் கல்லாதோரும் சமமாகவே முடியாது என்கிறான்1. இன்னும் மனிதனின் கற்கும் ஆர்வத்திற்கென எப்படி அதற்கென தம்மிடத்தில் இறைஞ்சுவது என இறைவனே கற்றுத் தருகிறான்2. மனிதர்களை ஆராயச்சொல்லியும், சிந்திக்கும்படியும் அல்குர்ஆனில், சுமார் 35 இடங்களில் கூறுகின்றான்3; கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு சுமார் 50 இடங்களில் அறிவுறுத்துகின்றான்; பிரபஞ்சம் தொடர்பாகவும் அறிவியல் அத்தாட்சிகள் தொடர்பாகவும் சுமார் 750 வசனங்களில் பேசுகின்றான்; இயற்கை விஞ்ஞானம், வானவியல், தாவரவியல், விலங்கியல், விவசாயம், மானிடவியல், மனோதத்துவம், மருத்துவம், சமூகவியல், வரலாறு, புவியியல் என கிட்டத்தட்ட மனித வாழ்வில் பங்கு வகிக்கும் எல்லாத் துறைகளுடன் தொடர்பான பல உண்மைகளும், அவற்றோடு தொடர்புடைய பல அடிப்படைகளும் குறிப்பிடுகின்றான். கல்வியின் மேன்மை பற்றிக் குறிப்பிடும்போதும், தன்னை அறிஞர்கள் மட்டுமே அஞ்சுவர் என்றே குறிப்பிடுகிறான்4.

இறைமறை மட்டுமல்லாது மாநபியின் மணிமொழிகளிலும் கல்விக்கான முக்கியத்துவம் எண்ணற்ற வகைகளில் வெளிப்படுகின்றது. கல்வியைத் தேடி நடப்பவர்க்கு சுவர்க்கத்துப் பாதை எளிதாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது5. உயிரோடிருப்பவர் மட்டுமல்ல, மரித்தவரின் பின்னேயும், அவர் தானே கற்றுப் பரப்பிய கல்வியானது செல்லும் என ஹதீஸில் உள்ளது6. தான் கல்லாதவராக இருந்தாலும், இறை நம்பிக்கையாளர்கள் அனைவரையும் கற்கச்சொல்லி ஊக்குவித்த தலைவராகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்துள்ளார். அறிவியலுக்கு முரணான யூகங்களை ஏனைய மார்க்கங்கள் மறுத்துரைக்கும் வேளையில், அனைத்து நம்பிக்கைகளும் (மார்க்க நம்பிக்கைகள் உட்பட) உறுதியான அறிவின் அடிப்படையில் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பது இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே..! இவ்வாறு இவ்வுலக வாழ்விலும், மறுமை வாழ்விலும் வெற்றி பெறும் வழிகளை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் எத்தி வைக்கும் மார்க்கத்தில் வாழும் நாம், அந்தக் கல்வியை எப்படி பெறுவது என்பதையும், அதனிலிருந்து நம் வெற்றிக்கு தயார் செய்வது எப்படி என்பதையும் திட்டமிடுகின்றோமா?? நம் முன்னோர்களின் கல்வி எந்நிலையில் இருந்தது, நாம் எந்நிலையில் உள்ளோம் என சிந்திக்கின்றோமா? உலக வரலாற்றிலே ஒவ்வொரு துறையிலும் இஸ்லாத்திற்கென ஒரு இடத்தை தக்க வைத்த நம் முன்னோர், கல்வியில் மட்டும் சவலைப்பிள்ளையாகவா இருந்தனர்??? இல்லை. இல்லவே இல்லை. இது வரை தெரியாமல் இருப்பினும் இனியாவது தெரிந்து கொள்வோம் நம் பாரம்பரியத்தை, கல்வியில் நம் சாதனைகளை..!

இஸ்லாமிய கல்விக் கொள்கை:

இஸ்லாமிய மார்க்கத்தின் கல்விக்கொள்கையை ஒரு வாக்கியத்தில் சொல்வதென்றால்... ’அல் ஃபவ்ஸ் பி அல் ச’அதா ஃபீ அல் தரய்ன்’ (الفوز بالسعادة في الدارين) என்று கூறலாம். தமிழில், ஈருலகிலும் (இறைவனின்) அருளை வென்று வாழ்வது எப்படி என்று எளிமைப் படுத்தலாம். அதாவது, நம் கல்வியானது இந்தக் கொள்கையை முன்வைத்தே, இந்த நெறிகளுக்குட்பட்டே இருக்க வேண்டும்.

அந்தக் கொள்கை என்ன, அதை எப்படி புரிந்து கொள்வது..?
மிக எளிது. இஸ்லாத்தில் ‘கற்றல்’ என்பது...
1. இறைவனின் நாட்டம் என்ன என்பதை அறிய, அதன் படி தன் வாழ்வை அமைக்க உதவுவது.
2. இஸ்லாம் கூறும் நற்குணங்கள் கொண்டு தம்மை பக்குவப்படுத்த, அதன்வழி ஒரு தனித்துவத்தை உருவாக்க உதவுவது.
3. தனி மனித ஒழுக்க மேம்பாடுக்கு வலிமை சேர்ப்பது7.

இப்படி ஒரு கொள்கை விவரிக்கப்படும்போது, கல்வி கற்பது என்பது ஒரு இபாதத்தாக, இறைவணக்கமாக, கட்டாயக்கடமையாக ஆகிவிடுகிறது8. இதனாலேயே இஸ்லாத்தில் இல்மும், அமலும் வேறு வேறல்ல, வாழ்க்கைக்குறிப்புக்களும் (தா’லீம்), பயிற்சி முறையும் (தா’தீப்) ஒன்றை விட்டு ஒன்று எந்தப் பொருளும் தருவதல்ல என்றாகிறது. இந்தக் காரணங்களாலேயே பண்டைய காலங்களில் இஸ்லாமியக்குடும்பங்கள் கல்வி பெறுவதையும், கற்றுத் தருவதையும் முழுமைப்படுத்தப்பட்ட ஒரு இபாதத்தாக பார்த்தன. அது மார்க்கக் கல்வியாயினும் சரி, இஸ்லாமியக் கல்வியாயினும் சரி. வரலாறு முழுவதும் கல்வியையும் கற்பவர்களையும், கல்வியாளர்களையும் இஸ்லாமிய மக்கள் எவ்வாறு பெருமதிப்புடன் நடத்தி வந்துள்ளனர் என்பதை.

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உதவுவது, இறைவணக்கமே என்றே அர்த்தம் கொண்டிருந்தார்கள். அகிலம் முழுவதும் பரவியிருந்த இஸ்லாமிய மக்கள் எல்லோரின் மனநிலையும் இதே போல் இருந்ததால்தான் கல்வி கற்கவும், கற்பிக்கவும் தூர தேசங்களுக்கு பயணம் செய்யவும் தயங்குவார் யாருமில்லாமல் போனது. எனவேதான் மொகலாய ஆட்சியைப் பற்றிய தனது நூலில், வரலாற்றாசிரியர் குலாம் அலி ஆஸாத் பில்கிராமி கூட, வளமான மக்கள், கற்பவர்களையும், கற்பிப்பவர்களையும் விருந்தோம்புவதை மிக்க மேலான ஒரு கவுரவமாகவே கருதினர் என்று குறிப்பிடுகிறார்9. அக்காலத்தில் ஆசிரியர்களின் ஊதியம் மிகக்குறைந்ததே எனினும், சமுதாயத்தில் அசைக்க முடியாத ஒரு பொறுப்பில் இருந்தனர். சமுதாய மக்கள் அனைவரின் நன்மதிப்பையும், போற்றுதலையும் பெற்றிருந்தனர். அகிலம் முழுவதும் கிலாஃபத்தின் ஆட்சி நடந்த இடங்களிலெல்லாம் இப்படியான ஒரு முன்னேற்றப்பாதையே ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அதே காலகட்டத்தில் இந்தியாவில் இஸ்லாமியர்களும், அவர்களின் கல்வியும் எந்த நிலையில்தான் இருந்தது??

இந்திய முஸ்லிம்களும் கல்வியும்.

காலனியாதிக்கத்திற்கு முன்:

தென்னகத்தை ஆண்டு வந்த சேர்மான பெருமாளால் முதல் இஸ்லாமியரைப் பெற்ற இந்தியா, எட்டாம் நூற்றாண்டில் உமய்யத் வம்சத்தின் ஆட்சியின் மூலம் இன்னும் அதிகமாக பிரகாசிக்கத் துவங்குகிறது. கி.பி 712இல் முஹம்மத் பின் காஸிம் என்னும் உமய்யத் பேரரசர் சிந்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலிருந்து இந்தியா, இஸ்லாத்தை மார்க்க ரீதியாக, ஒரு கட்டமைப்பாக சந்திக்கிறது. 1206இல் பிரித்திவிராஜ் சௌஹானுக்கெதிரான, சுல்தான் முஹம்மத் கோரியின் வெற்றியைத் தொடர்ந்து 1526 வரையிலும் இந்தியாவில் சுல்தான்களின் ஆட்சி நடை பெறுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியால் நாட்டை அபகரிக்கும் வரை...!

பிரித்தானியக் கொள்ளைக்காரர்களின் சூழ்ச்சி தெரிய வரும் முன்னர் வரை சாந்தியும் சமாதானமும் கோலோச்சிய அந்தக் காலகட்டத்தில் இஸ்லாம், ஒரு புதிய பார்வையை இந்தியர்களுக்கு சுவைக்கத் தருகிறது. இஸ்லாமிய ஆட்சியில் பல்வேறு விதமான கல்விக்கூடங்கள் இந்தியாவில் நிறுவப்படுகின்றன. மக்தபுகள், மதரஸாக்கள், மசூதிகள், க்ஹன்காஹ்க்கள் (khanqahs - சூஃபிக்களின் கல்வி நிலையம்) மற்றும் தனி மனிதனின் வீடுகள் என எல்லா இடங்களும் கல்வி நிலையங்களாயின. கிட்டத்தட்ட ஒவ்வொரு மசூதியுமே அப்போது ஒரு தொடக்கப்பள்ளியாக இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. இப்போதுள்ளது போல், மாணவர் விடுதியில் குளிர்சாதன வசதி உண்டா.... மாணவர்கள் வந்து போக வாகன வசதி உண்டா என்றெல்லாம் யோசிக்காத, யோசிக்கத்தெரியாத காலம் அது. எந்த வீட்டின் முன் திண்ணை பெரியதாக, காலியாக இருக்கிறதோ அங்கே ஆசிரியர் தம் மாணவர்களுடன் வந்து பாடம் நடத்தத் தொடங்கி விடுவார்10. சம்பளம் என்றால் என்னவென்றே தெரியாத ஆசிரியர்களும் இருந்தார்கள். ஆசிரியர்களின் பின்னேயே அலைந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு தேவைப்படின் உடல் வருந்தி உழைத்து உதவும் ஆசிரியர்களும் இருந்தார்கள், அன்று. தேவைப்பட்டதெல்லாம் இருவர் மட்டுமே. கல்வி கற்கும் நேர்மையான எண்ணத்தைக் கொண்டதொரு மாணவன், கற்பித்துக் கொடுக்க அப்பழுக்கில்லாத ஒரு ஆசிரியர். அவ்வளவே.

கல்விக்கு மக்களே உதவுகிறார்களே நமக்கென்ன என அரசு வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றதா.... அதுதான் இல்லை. யாரொருவரும் கல்வி கற்பதற்காக மக்தபுகளையும், மதரஸாக்களையும் கட்டுவது, நற்பேறுகள் நிறைந்ததொரு அறமாகவே எண்ணப்பட்டது. இப்படி சுல்தான்கள் முதல், உள்ளூர் நவாபுமார்கள் வரை நிறுவித்தந்த தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான கல்விக்கூடங்கள் இந்தியா முழுதும் வியாபித்திருந்தன. இதனால் தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப தொடக்கப்பள்ளியின் வளாகத்திலேயே மேற்படிப்புக்கள் நடத்தப்படுவதும், மாணவர்களின் வசதியை முன்னிட்டு இட அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வருவதும் மிக எளிதாகவே இருந்தது. இதிலெல்லாம் ஏற்றத்தாழ்வு பார்க்காததன் காரணமாக தனியொருவரின் வீட்டு முற்றத்தில் நடத்தப்படும் மேல்மட்டக் கல்வியிலும் சரி, அரசு கட்டிக்கொடுத்த ஆரம்பப்பள்ளியிலும் சரி, நேர்மையான கற்றல்/பகிர்தல் மட்டுமே எஞ்சியிருந்ததே தவிர சுயலாபமோ, பணம் செய்யும் வழியோ அல்ல. மார்க்கக் கல்வியும், உலகக்கல்வியும் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் வரலாற்றுப்பாடங்களின் ஒவ்வொரு பக்கத்திலும் இந்திய மண்ணின் மைந்தர்களையும் அவர்களின் சாதனைகளையும் எழுதின. இஸ்லாமானது சிந்து மாகாணம் வரையில் பரவி இருந்த இக்காலகட்டத்தில் ’ஹதீஸ்’ கலையில் சிறந்து விளங்கிய சிந்து மாகாண அறிஞர்களின் பெயர்களும் இங்கேயிருந்துதான் தங்கள் பயணத்தை ஆரம்பித்தன11.

பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவில் வட மேற்குத்திசையிலிருந்து முஸ்லிம்களின் ஆட்சி வலுப்பெற தொடங்கியது. வட இந்தியாவிலும் மத்தியிலும் தங்கள் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடங்கினர். கைப்பற்றிய ஒவ்வொரு புதிய மாகாணத்திலும் உள்ள முக்கிய நகரங்கள், கல்வி கற்பதற்கான தளங்கள் ஆயின. ஆரம்ப கட்டத்தில் முல்தானும், லாகூரும் அதன் பின் தில்லியும் வட இந்தியாவின் பிரசித்தி பெற்ற கல்வி நகரங்கள் ஆயின12.

இதே நிலை பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது. அதே நேரத்தில் மத்திய ஆசியாவையும், கொரொசான் மற்றும் ஆஃப்கானையும் தம்முடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த மங்கோலியர்கள், அங்கெல்லாம் இருந்த இஸ்லாமிய அறிஞர்களை குடும்பத்துடன் நாடு கடத்திக்கொண்டிருந்தனர். எஞ்சியவர்களை கொலை செய்தும், குடும்பங்களை அழித்தும், ஐநூறு வருடங்களாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் மேல் எழுதப்பட்டிருந்த நூற்களை கொளுத்தியும் அராஜகம் செய்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் தில்லியில் ஒரு மூட்டை நிறைய புத்தகங்களை சுமந்தவாறு உலமாக்களும், அவர்களின் குடும்பமும் அகதிகளாக வந்து சேர்வது என்பது சாதாரணமாகியிருந்தது. அவர்களிடமிருந்து தப்பித்த பல உலமாக்களுக்கும், இஸ்லாமிய அறிஞர்களுக்கும் இந்திய நாடுதான் பாதுகாப்பான புகலிடத்தை அளித்தது. தங்க இடம் தேடி வந்தவர்களுக்கு இந்திய இஸ்லாமிய அரசர்கள், வாழ இடமளித்து, கற்றுக்கொடுக்க கல்விக்கூடங்களை அமைத்து அவர் வழி இஸ்லாமிய ஞானத்தை இந்தியாவெங்கும் பரப்பினார்கள். இதனால் இஸ்லாமிய அறிஞர்களும் சூஃபி ஞானிகளும், உலமாக்களும் எங்கெங்கிலும் வியாபித்திருந்தனர்.

தென்னகத்தில் கல்வி:

இந்தியா முழுதும் இஸ்லாமிய வாழ்வும், அதன் வழி கல்வியும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்க, தென்னகம் மட்டும் வெறுமனே கை கட்டிக்கொண்டு இருக்குமா? வரலாற்றில் பதியப்பட்டிருப்பதைப் படியுங்கள்20. தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க - மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புறக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

எங்கே வீழ்ந்தோம் நாம்?:

இப்படி சாதனைகள் பல புரிந்திருந்தாலும், வெற்றிகளும், புகழ் மாலைகளும் பல சூடியிருந்தாலும், நம் சமூகம் இன்று உணவுக்கும், உறைவிடத்திற்கும் அலைய வேண்டிய அவலநிலை ஏற்பட்டது ஏன்? சுதந்திர இந்தியாவிற்காக பல்லாயிரக்கணக்கான உலமாக்களையும், குடும்பங்களையும், குழந்தைகளையும் கூட இரையாக்கிய நம் சமூகம் இன்று கூனிக்குறுகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்? மறுமலர்ச்சிகள் பல நூறு தடவை மலர்ந்திருந்தாலும், ஒரு தெள்ளிய நோக்கை, ஒரு திட்டமிட்ட இலக்கை நோக்கி செல்லும்படியான வேகமும், விவேகமும் எவற்றிற்கும் இல்லாமல் போனது ஏன்? இருக்கிறது, ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஒரு மௌன அழுகை இருப்பது போல், நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட நம் சமூகம் இன்று கேட்பார் எவருமிலாமல் போன அனாதையாய் நிற்கிறதே அது ஏன் என இதன் காரண காரியங்களை உற்று நோக்குவதே நாம் இந்த சறுக்கலிலிருந்து மீள வழி செய்யும்... இன்ஷா அல்லாஹ்.

பிரித்தானிய அரசு ஆட்சிக்கு வரும் முன்னர் இருந்தே நம் தோல்வி துவங்கி விட்டது. வியப்பாக இருக்கிறதா? இதுவே உண்மை. பிரித்தானிய அரசுக்கு முன் நம் முன்னோர்கள் எவ்வாறு படித்தனர், எத்தகைய நூற்களை, பாடங்களை படித்தனர் என்பதை உற்று நோக்கினால் புரியும், நம் சறுக்கலுக்கான முக்கிய காரணி. ஆம்.... ‘வரலாறு’ எனும் முக்கிய பாடத்தை ஷாஹ் வலியுல்லாஹ்வின் பாடத்திட்டத்திலும் காணவில்லை, ஷிஹால்வியின் பாடத்திட்டத்திலும் காணவில்லை. இதுவே, முக்கிய காரணி. இல்லை, அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் நன்றாக கற்காததால்தான் நாம் வீழ்ந்தோம் என்பவர்களிடம் சில கேள்விகள்.

இருபது வருடங்களுக்கு முன்பு வரை வல்லரசாக இருந்த ரஷ்யாவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலிடத்தில்தான் இருந்தது.
இன்று வல்லரசாய் இருக்கும் அமெரிக்காவும், தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் எங்களை முறியடிக்க எவருமிலர் என்று கர்ஜிக்கும் அமெரிக்காவும் சில வருடங்கள் முன்னர் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியிலிருந்து இன்னும் வெளியேற இயலாமல் தத்தளிக்கிறது.

இன்னும் பல உதாரணங்களைச் சொல்லலாம். அதில் உதுமானியப் பேரரசும் ஒன்று எனலாம். ஆட்சியை அதிகரிக்கவும், எல்லைகளை விஸ்தரிக்கவும் தெரிந்தவர்களுக்கு மக்களின் மனதில் நம்பிக்கையை, அதன் மூலம் மனபலத்தை வளர்க்கத் தெரியாமல் போனதும் ஒரு காரணம்.

உதாரணமாக இன்னொரு வீழ்ச்சியையும் பார்க்கலாம். நான்கு மைல்களுக்கு ஒரு கல்விக்கூடம் என்றும், தனது ஆட்சியின் கீழ் இருக்கும் முஸ்லிம் மக்களை ஹதீத்தையும், குர்’ஆனையும் படிக்க வலியுறுத்தியும், முதன் முதலில் இந்தியாவில் நூலகங்களையும் ஏற்படுத்தியும், பூரண மதுவிலக்கு சட்டத்தையும் அமுல்படுத்தியும், பிரித்தானிய அரசுக்கே ராக்கெட்டை ஏவி தனது அறிவியல் - பலத்தையும் காட்டிய மாவீரர் திப்பு சுல்தானின் கல்வித்துறையின் சாதனைகளைப்22 பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நாளைய மாணவச்செல்வங்களுக்கு திப்பு சுல்தானும் ஒரு அரசராக இருந்தார் என்று மட்டுமே தெரியுமே தவிர, நம் பாரம்பரியத்தைப் பற்றித் தெரியாது. அஷோக சக்கரவர்த்தியின் அருமை பெருமைகளை மனனம் செய்யும் குழந்தைகளுக்கு, நம் முஸ்லிம் / மொகலாய மன்னர்கள் யாரும் இப்படி இருக்கவில்லையே எனத்தான் தோன்றும். அந்த வடுதான், அந்த எண்ணம்தான் வளர்ந்து கொண்டே இருக்கும் நம் தோல்வியின் அஸ்திவாரம்.

கணிதத்தில் அல்ஜீப்ராவிலிருந்து, மருத்துவத்தில் கண்களுக்கான சத்திர சிகிச்சை வரை23 உலகம் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் பல தொழில்நுட்பங்களையும், பாடங்களையும், அடிப்படைகளையும் தந்த நம் முஸ்லிம் சமுதாயம், உலகிற்கு வாழும் வழி முறைகளையும், குடும்ப - சமூக பண்புகளையும், குணநலன்களையும் சேர்த்தே கற்றுத்தந்தது. ஆனால் கற்றுத்தந்த நாமே அதை மறந்து போனதும், நிராகரித்ததும், வரலாற்றின் மிக வேதனையான பக்கங்கள். எதிரில் வரும் பெண்ணின் மீது பார்வையை ஏவினார் என்பதற்காக அந்தத் தோழரின் முகத்தை தன் கையால் திசை திருப்பிய24 நபிகளாரின் வழி வந்த நாம், கோப்பையில் மதுவும், காதினில் கஜலும், கண்களுக்கு விருந்தாய் பெண்களின் நடனமும் என மாறிப்போனது, முஸ்லிம் சமுதாயத்தின் வீழ்ச்சியின் தொடக்கப்புள்ளி. ஆனால், அப்படி தறிகெட்டுப் போன ஒரு தலைமுறையின் தொடக்கம் எங்கே? நமக்களிக்கப்பட்ட வேதத்தையும், நபிகளாரின் வாழ்வையும் சரிவர கற்காதது, அறிவுக்கெட்டாத செய்கைகளின் மூலம் ஞானத்தைத் தேடியது, முடிவில் கற்பனையிலும் எட்டாத கொடுமைகளையும், குழப்பங்களையும் கொண்ட ஆட்சியாளர்களாய் வாழ்ந்தது. நபிகளாரின் வாழ்க்கை ஒரு வரலாறு. சஹாபாக்களின் வாழ்க்கை ஒரு வரலாறு. தத்தம் குணநலன்களின் மூலமே உலகின் பல்வேறு இடங்களில் இஸ்லாத்தைப் பரப்பிய அறிஞர்களின் வரலாறு... இவற்றில் எதுவுமே இல்லாமல் வாழ்ந்த தலைமுறையினாலேயே நாம் இன்று இந்த நிலையில் உள்ளோம்.

மலேசியாவின் சமகாலத்திய இஸ்லாமிய தத்துவஞானியும் சிந்தனையாளருமான சய்யித் அல் அத்தாஸ் கூறுகிறார்25,
”தற்போதைய காலகட்டத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்திற்கும் ஆரம்பப்புள்ளியாக ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டும் என்றால், அது நாம் தொலைத்த ‘அதப்’ என்றே சொல்வேன். (அதப் : Adab : أدب : நடத்தை).
 வரிசைக்கிரமமாக சொன்னால்,
1. (பெறுகின்ற / பெறப்பட்ட) அறிவில் உள்ள குழப்பமும், தவறுகளும், காரணிகளை உருவாக்குவது;
2. சமூகத்தில் ‘அதப்’ / நடத்தை தொலைந்து போவது; மேற்கண்ட (1) மற்றும் (2) காரணங்களால்,
3. முஸ்லிம் சமுதாயத்திற்கு சற்றும் பொருந்தாத, தலைமைப் பதவிக்கு தகுதி இல்லாத, தார்மீக அறிவார்ந்த மற்றும் ஆன்மீகம் தரத்தைப் பெறாத ‘தலைவர்களின்’ எழுச்சியும், அவர்களின் ஆட்சியால் தொடர்ந்து (1) முதலாம் காரணியை நிலை நிறுத்தச் செய்தலும்.

மேலே கண்ட இந்த வேர்கள்தான் நம்முடைய இந்த நிலைக்கு ஒரு தீய வட்டத்திலேயே உழன்று கொண்டிருக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து கொண்டிருக்கும் காரணிகள். இந்த நச்சு வட்டம் உடைத்து இந்த கல்லறை பிரச்சினைக்கு தீர்வாக பொருட்டு, நாம் முதலில் இழந்த அதப்பை, வரலாற்றை திரும்ப கொண்டு வர வேண்டும். ஏனெனில் யாருக்கு கல்வி தரப்படுகிறதோ, யார் ஞானத்தாகத்தில் இருக்கிறார்களோ அவர்களிடம் இந்த நன்னடத்தையும், அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் ஆற்றிய அரும் பெரும் சாதனைகளின் அறிவும் இருத்தல் வேண்டும். அதுவே வெற்றியின் அடிகோலாகும்.

ஒரு சமயம் ஈராக்கில் உள்ள பஸ்ரா நகரின் கல்வியாளர்கள் நிறைந்ததொரு ஒரு சபையில் அரபியொருவர், ஒரு சிறுவனைப் பார்த்து அவரின் நண்பரிடம் கூறினார், ”நானும் என் குழந்தைகளுக்காக பெரும் பெரும் செலவெல்லாம் செய்து நல்ல நல்ல 'மு'அத்தபீன்'களைக்26 கொண்டு அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்...என்றாலும் இந்த சிறுவனைப் போல அவர்களின் குணநலன்கள் இல்லை என்று. யார் அந்தச்சிறுவர்? பின்னாளில் ’ஷேக்குல் இஸ்லாம்’ என்றும், ’அஹ்லஸ் ஸுன்னாவின் இமாம்’ என்றும் நற்புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞரும், தத்துவ ஞானியுமான இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்27 (ரஹி) அவர்களே அந்தச் சிறுவர். எத்தனை ஒரு சீரான பாதை என்று பாருங்கள். நன்னடத்தையுள்ள ஒரு சிறுவன், கல்வியாளர்களுடன் தொடர்பில் இருப்பவன் பின்னாளில் விவேகமும், அதனால் புகழும் பெறுகிறார் என்றால், நடுவில் எந்தத் தடையாவது உள்ளதா? இந்த எளிய உதாரணம் போதாதா?

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் மட்டுமல்ல, இறுதி இறைத் தூதர் மாநபி (ஸல்) அவர்கள், தாம் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட காரணமே நற்குணங்களை சீரமைக்கவே என்று கூறியுள்ளார்28. மாநபியைப் படைத்து நம்மிடையே அனுப்பி வைத்த ஏக இறைவனும் நபிகளாரை, நற்குணங்களில் உன்னத நிலையை உடையவர் என்கிறான்29. ஏனைய நபிகளைக் குறிப்பிடுகையில் அல்லாஹ், அவர் வாய்மையாளராக இருந்தார், நேர்மையாளராக இருந்தார் என்று குறிப்பிடும் வேளையில் இவ்வுலகின் கடைசி மனிதர் வரைக்கும் பின்பற்றக்கொடுத்த நபிகள் நாயகத்தை(ஸல்), அல்லாஹ் நற்குணங்களைக் கொண்ட உன்னதமானவர் என்கிறான். இதுவே நமக்கு குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள பாடமாகும். இபாதத்தில் மட்டுமல்லாது வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என நம் இறைவன் நமக்கு சொல்வதாகும். நம் சமூகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தற்போது வேரோடியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் முழுத்தீர்வு, இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நன்னடத்தையை கற்பிப்பதும், வரலாற்றை எத்தி வைப்பதுவும் மட்டுமே...!
1. ஒவ்வொரு சம்பவத்திற்கும் யாரொருவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தும் விதத்தில் எதிர்ச்செயல் ஆற்றுவதை நிறுத்தி தகுந்த பதிலை தக்க முறையில் அளித்தல் வேண்டும். (React Vs Response)

2. பிறக்கும் ஒவ்வொரு முஸ்லிம் குழந்தைக்கும் கட்டாயக் கல்வி என்பது விரைவாக அமலாக்கப்பட வேண்டும். இதை எந்த அரசும் செய்யாது. நம் சமூகத்திற்கு நாம்தான் செய்ய வேண்டும்.

3. நாம் வாழும் மார்க்கம் மெய்யானது மட்டுமில்லாமல் எத்தனை சிறப்பு மிக்கது, புராதனமானது, எத்தனை சாதனையாளர்களையும், சாதனைகளையும் தோற்றுவித்த மார்க்கம் என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு மட்டுமில்லை. எல்லாப் பெற்றோருக்கும் இவை எல்லாம் விரல் நுனியில் தெரிந்திருக்க வேண்டும்.

4. இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் எல்லாம் தஃப்ஸீரையும், ஹதீத்களையும் கற்றுத் தர வேண்டும். குறிப்பிட்ட, பள்ளிக்கல்வியில் தேறாத, வறுமையில் உழல்கின்றவர்களுக்கு மட்டும் தர்ஸ்-ஏ-நிஜாமியும், ஸிஹாஹ்-ஸித்தாவும் என்பதை வேரறுத்து ஒவ்வொரு குடும்பத்தின் குழந்தைகளும் இவற்றை கற்றுக்கொள்ள வழி செய்யப்பட வேண்டும்.

5. எந்தக் காரணங்களுக்காகவும் பள்ளி செல்வதிலிருந்து குழந்தைகளை நிறுத்தாமல் கல்வியை பரிபூரணமாக்க வேண்டும்.

6. பெற்றோரும், மற்றோரும், நம் சமூகத்திற்கு இந்தத் திட்டத்தையும், அதனால் இன்ஷா அல்லாஹ் நாம் எதிர்பார்க்கும் வெற்றியையும் பற்றி தெளிவான உரைகள் நிகழ்த்த வேண்டும். பரப்ப வேண்டும்.

7. எந்தப் பணியில் இருந்தாலும், பணியில் இருக்கும்போது வேறெந்த சிந்தனையுமின்றி உழைக்க வேண்டும்.
8. உடலையும், மூளையையும் கசக்கி சம்பாதித்த பணத்தை கவனமாக சேமிக்க வேண்டும். சேமிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். சமுதாய தலைவர்களும் நிதி மேலாண்மையில் உள்ளோரும் அதற்கு உதவ வேண்டும்.

9. ஓய்வு நேரங்களில் ஊடகங்கள் வழியாகவோ உள்ளூர் ஜமாஅத் வழியாகவோ இஸ்லாமியப் பிரச்சாரங்களையும், பயான்களையும் கேட்க வேண்டும். தவறாமல் மார்க்கம் சம்பந்தப்பட்ட வகுப்புக்களில் கலந்து கொள்ளல் வேண்டும்.

10. குழந்தைகளின் கல்வியை, அதன் மீதான அமலை தீவிர கவனத்துடன் உற்று நோக்க வேண்டும். நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களை மார்க்கப்பிடியிலிருந்து வழுவாமல் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment